"ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல ஹெலிகாப்டர் சேவை..!" - போலி இணையதளம் தொடங்கி மோசடி செய்யும் கும்பல்
ஆன்மீகத் தளங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை என்ற பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி, அதன் மூலம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல ஆசைப்படுவோர் கூகுளில் சென்று தேடும்போது தங்களது இணையதளம் அவர்களின் பார்வையில் படும்படி மோசடி கும்பல் விளம்பரங்களைக் காண்பிக்கிறது. ஹெலிகாப்டரில் செல்ல ஆசைப்பட்டு, அந்த இணையதளத்துக்குள் சென்று பக்தர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்தவுடன் அவர்களின் வாட்சப் எண் மூலம் உரையாடல் தொடங்குகிறது.
நாட்டிலுள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோயில்களில் புகைப்படங்களை அனுப்பி, அவற்றுக்கான கட்டண விபரங்களையும் அனுப்புகின்றனர். தேவைப்படும் இடத்தை தேர்வு செய்ததும் யுபிஐ மூலம் முன்பணம் பெறுகின்றனர். பணம் அனுப்பியதும் அந்த எண், சுவிட்ச் ஆஃப் ஆகி விடும். எனவே இணைய முகவரிகளை பயன்படுத்தும்போது கவனமாக செயல்படும்படி சைபர் கிரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் எச்சரித்துள்ளார்.
Comments